பூந்தமல்லி:
செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டு சாலையில் வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள்
துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த அன்சாரி (வயது 20), அவரது சகோதரி தமீமா, ஆனந்த் (25), அவரது நண்பர் ராஜ்
(25) ஆகியோர் போலீசாரின் தடுப்பையும் மீறி 2 மோட்டார்சைக்கிள்களில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்லும் சாலையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றனர்.
அப்போது 4 பேரும் மோட்டார் சைக்கிள்களுடன் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் அங்கு இருந்த மணல் திட்டை பிடித்தபடி அங்கு
இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்க முயன்றனர்.
ஆனால் அவர்களுடைய முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து விருகம்பாக்கம் தீயணைப்பு போலீசார் விரைந்து சென்று கயிறுகள் கட்டி நீண்ட நேர
போராட்டத்திற்கு பின்னர் 4 பேரையும் மீட்டு குன்றத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரிக்கை செய்து
அனுப்பி வைத்தனர்.
இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அங்கேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போலீசாரின் தடுப்பு காவலையும் மீறி ஆபத்தை உணராமல் சென்ற 4 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இரவு நேரத்தில் குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.