கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி அருகே உள்ள அம்பலக்காரன்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (வயது 70). விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் மோட்டார் சைக்கிளில் கருங்காலக்குடிக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குன்னங்குடிப்பட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலை ஓரத்தில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் சின்னையாவின் மோட்டார்சைக்கிள் மீது மோதினார். இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னையா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.