கைது 
செய்திகள்

கொசப்பேட்டையில் மருந்துக்கடை ஊழியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது

கொசப்பேட்டையில் மருந்துக்கடை ஊழியர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்:

வேலூர் கொசப்பேட்டை லால்சிங்குமரன் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 43). இவர் கண்ணமங்கலத்தில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ந் தேதி இரவு திருநாவுக்கரசு மற்றும் அவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் வீட்டில் படுத்து தூங்கினார்கள். நள்ளிரவு வீடு புகுந்த மர்மநபர் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்தனர். பின்னர் பீரோவை உடைத்து 7 பவுன் நகையை திருடி சென்றார். 13-ந் தேதி காலை கண்விழித்த திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஒரு கண்காணிப்பு கேமராவில் சலவன்பேட்டையை சேர்ந்த முரளி மகன் ராகுல் (19) உருவம் பதிவாகியிருந்தது. அதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், திருநாவுக்கரசு வீடு புகுந்து நகையை திருடியது ராகுல் என்று தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, 7 பவுன் நகையை மீட்டனர்.