கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள விழல்கோட்டகத்தில் அரசு நூலகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்த நூலகத்தில் விழல்கோட்டகம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் சென்று நூல்கள் மற்றும் தினசரி பத்திரிகைகளை படித்து வருகின்றனர். இந்த நூலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டு மழைநீர் ஒழுகும் நிலை உள்ளது.
இதனால் நூல்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் நூலகத்தை முறையாக பராமரிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நூலகத்தை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று விழல்கோட்டகம் மற்றும் அதை சுற்றிஉள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.