கைது 
செய்திகள்

கடத்தப்பட்ட குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை- புரோக்கர்கள் அதிரடி கைது

முத்துப்பாண்டி, கற்பகம் தம்பதியிடம் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

பொள்ளாச்சி:

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் மணிகண்டன் (35). பழைய துணி வியாபாரி. இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு 5 மாத குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.

மணிகண்டன் கடந்த சில நாட்களாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆனைமலையில் உள்ள பஸ் நிலையத்தில் தங்கி இருந்தார். கடந்த 28-ந் தேதி இரவு சாப்பிட பணம் இல்லாததால் சங்கீதா அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்பதற்காக சாலையோரம் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒருவர் சங்கீதாவிடம் பணத்தை கொடுத்து குழந்தைகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்குமாறு கூறினார். நீ கடைக்கு சென்று வரும் வரை நான் 5 மாத கைக்குழந்தையை பார்த்து கொள்வதாக கூறினார்.

அந்த நபரை நம்பி சங்கீதாவும் குழந்தையை கொடுத்து விட்டு கடைக்கு சென்றார். ஆனால் அந்த நபரோ, சங்கீதாவை ஏமாற்றி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார்.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நீல நிற சட்டை மற்றும் கண்ணாடி அணிந்தபடி நின்றிருந்த நபர், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுப்பதும், அதன் பின்னர் குழந்தையை தூக்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குழந்தையை கடத்தியது பொள்ளாச்சி அடுத்த சேத்துமடையை சேர்ந்த ராமர் மற்றும் அவரது நண்பர் முருகேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சேத்துமடை விரைந்து சென்று வீட்டில் பதுங்கியிருந்த ராமர், முருகேசன் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் கடத்தப்பட்ட குழந்தையை அவர்கள் அங்கலக்குறிச்சி பகுதியில் குழந்தை இல்லாமல் இருந்த முத்துப்பாண்டி, கற்பகம் தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு பேரம் பேசி விற்றதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முத்துப்பாண்டி, கற்பகம் தம்பதியிடம் இருந்து அந்த குழந்தையை போலீசார் மீட்டனர். பின்னர் குழந்தை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலீசாரிடம் கைதான ராமர், முருகேசன் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் 2 பேரும் ஆனைமலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தோம். அப்போது மணிகண்டன் தனது மனைவி மற்றும் 5 மாத குழந்தையுடன் இருப்பதை பார்த்தோம். அந்த குழந்தையை எப்படியாவது கடத்தி விற்று பணம் பார்த்து விட வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கான நேரத்திற்காக காத்திருந்தோம்.

அதன்படி சம்பவத்தன்று சாலையோரம் சங்கீதா கைக்குழந்தையுடன் நிற்பதை பார்த்த நாங்கள் அவரின் அருகே சென்று பேச்சு கொடுத்து, சாப்பாடு வாங்குவதற்கு பணம் கொடுத்தோம். சங்கீதா கடைக்கு சென்றதும் குழந்தையை மோட்டார்சைக்கிளில் கடத்திச் சென்றோம். அந்த குழந்தையை அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த தம்பதியிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்று விட்டு பதுங்கியிருந்தோம். ஆனால் போலீசார் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் 2 பேரும் இதேபோல வேறு எந்த குழந்தைகளையாவது கடத்தி விற்றார்களா? குழந்தை கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கடத்திய குழந்தையை வாங்கியதால் அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த முத்துப்பாண்டி- கற்பகம் தம்பதியினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.