கோப்புப்படம் 
செய்திகள்

காதலிக்கு இன்று திருமணம்- தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

காதலிக்கு இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கோவை:

கோவையை சேர்ந்த 22 வயது இளம்பெண் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த அஜித் (வயது 23) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் அஜித்தின் நடவடிக்கை சரியில்லாததால் நாளடைவில் அந்த இளம்பெண் அவரது காதலை கைவிட்டார்.

ஆனால் அஜித் தொடர்ந்து அவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இதனை அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் அஜித்தை கண்டித்து அறிவுரை கூறினர். பின்னர் அந்த இளம்பெண்ணுக்கு வரன் பார்த்தனர்.

வரன் அமைந்ததும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனை அறிந்துகொண்ட அஜித் மீண்டும் அந்த இளம்பெண்ணை தொந்தரவு செய்து வந்தார்.

இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அவரை ஆவாரம்பாளையத்தில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்க வைத்தனர். அந்த இடத்தை எவ்வாறோ தெரிந்து கொண்ட அஜித் கேரளாவில் இருந்து புறப்பட்டு வந்தார்.

அந்த இளம்பெண்ணை தேடி ஆவாரம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு அந்த இளம்பெண்ணை வெளியே வர கூறி தகராறில் ஈடுபட்டார். இதனை கண்ட அவரது பெரியம்மா வெளியே வந்து அஜித்தை அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

அப்போது ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணின் பெரியம்மாவை குத்தினார். இதில் அவர் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த அஜித் பயந்துபோய் அந்த கத்தியால் தன்னைத்தானே வயிற்றிலும், கையிலும் குத்தி ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அஜித்தை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பின்னர் இதுகுறித்து இளம்பெண்ணின் பெரியம்மா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.