முதியவர் சுட்டுக்கொலை 
செய்திகள்

பக்கத்து வீட்டில் தகராறு: சமரசத்துக்கு சென்ற முதியவர் சுட்டுக்கொலை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா அடுத்து நானவயல் பகுதியில் முதியவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருபுழா அடுத்து நானவயல் பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 62). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் டோமி (45). இவர் கடந்த 6 மாதமாக குடித்து விட்டு மனைவி மற்றும் பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.

மனைவி மற்றும் பெற்றோரை அடித்து உதைக்கும்போது அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறி சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பேபி அவர்கள் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்து வைப்பார். நாளுக்கு நாள் இதேபோன்ற சம்பவம் நடந்தது. இதில் தனக்கு எதிராகவும், மனைவி, பெற்றோருக்கு பேபி ஆதரவாக செயல்படுவதாக நினைத்து டோமி ஆத்திரமடைந்தார்.

இந்நிலையில் நேற்று மாலையும் டோமி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போதும் மனைவி மற்றும் பெற்றோரை கடுமையாக தாக்கினார். இதில் அவர்கள் அலறி சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு டோமி வீட்டுக்கு சென்ற பேபி சமாதானம் செய்து வைக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த டோமி வீட்டுக்குள் சென்று அங்கிருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து பேபியின் நெஞ்சில் சுட்டார்.

துப்பாக்கி குண்டு நெஞ்சை துளைத்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து டோமி துப்பாக்கியுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்கு தப்பி ஓட்டம் பிடித்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த பேபியை மீட்டு கண்ணூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து செருபுழச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கியுடன் தப்பி ஓடிய கொலையாளி டோமியை தேடி வருகிறார்கள்.