திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துசலாம். இவர் வளைகுடா நாடுகளான மஸ்கட், ஓமன் ஆகிய நாடுகளில் கடைகள் நடத்தி வருகிறார்.
கடந்த 6 ஆண்டுகளாக மஸ்கட் நாட்டில் வசிக்கிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக குழந்தைகளையும், மனைவியையும் சொந்த ஊரான கேரளாவிற்கு அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் அபுதாபி பிக் டிக்கெட் என்ற லாட்டரிச் சீட்டை வாங்கினார். குலுக்கலில் இவர் எடுத்த லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசு விழுந்தது. இதற்கான பரிசுத் தொகை 20 மில்லியன் திர்காம் (இந்திய மதிப்பில் ரூ.40 கோடி) ஆகும்.
முதல் பரிசு ரூ.40 கோடி கிடைத்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு கூறிய அப்துசலாம், இந்த தொகையில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வேன். மீதம் உள்ள தொகையை என் 3 மாத கைக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரின் பாதுகாப்பான எதிர்காலத்திற்கு பயன்படுத்திக்கொள்வேன் என்றார்.
இந்த லாட்டரிச்சீட்டில் 2-வது பரிசும் ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த சாஜு தாமஸ் என்பவருக்கே கிடைத்தது. அவருக்கு கிடைத்த பரிசு தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.6 கோடி ஆகும்.