ஐஏஎஸ் சிவசங்கர் 
செய்திகள்

தங்கம் கடத்தல் வழக்கு: முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளா தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரின் ஜாமீன் மனுவை கொச்சி கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கடந்த ஜூலை 5-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சரக்குப் பெட்டிகள் வந்தன. சந்தேகத்தின் பேரில், அந்தப் பெட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் 30 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷுக்கு கடத்தலில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு, தங்கக் கடத்தல் சம்பவம் தொடர்பாக அவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல, அமலாக்கத்துறையும் அவரிடம் பலமுறை விசாரணை மேற்கொண்டது.

இதனிடையே, சிவசங்கர் சார்பில் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை கைது செய்ய அக்டோபர் 28-ம்தேதி வரை இடைக்கால தடைவிதித்திருந்தது. கைது செய்வதற்கன கெடு முடிந்த நிலையில், முன்ஜாமீன் மனு 29-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கரின் முன் ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சிவசங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்று கொச்சியில் உள்ள முதன்மை செசன் கோர்ட்டில் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. கோர்ட் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து ஜாமீன் மனுமை தள்ளுபடி செய்தது.