கோப்புப்படம் 
செய்திகள்

கேரள உள்ளாட்சி தேர்தல்: 14-ந்தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

கேரளாவில் 3-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 14-ந்தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது.

கேரள மாநில தேர்தல் கமி‌ஷன் இத்தேர்தலை 3 கட்டங்களாக நடத்துகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் 73.12 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

2-வது கட்டமாக எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் 10-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 76.38 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

3-ம் கட்ட தேர்தல் வருகிற 14-ந்தேதி கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது.

இந்த 4 மாவட்டங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு ஆன்லைன் மூலம் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 16-ந்தேதி எண்ணப்படுகிறது. அன்று மாலைக்குள் முடிவுகள் தெரிந்து விடும்.

வழக்கமாக கேரளாவில் கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையேதான் இருமுனை போட்டி நடக்கும். இந்த முறை பாரதிய ஜனதா கட்சியும் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. அவர்களும் தீவிரமாக களம் இறங்கியதால் கேரளாவில் மும்முனை போட்டி நிலவியது.