மரணம் 
செய்திகள்

கீழக்கரை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்

கீழக்கரை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சேதுபதி நகரைச் சேர்ந்தவர் ராமர். இவரது இரண்டாவது மகள் மோனிகா (வயது 18). கடந்த 4 ஆண்டுகளாக இவர் ஏர்வாடியில் தங்கி இருந்தார்.

அப்போது ஏர்வாடி அருகே உள்ள பழஞ்சிறையை சேர்ந்த தர்மராஜ் என்பவரை காதலித்தார். இது குறித்து ராமர் வீட்டிற்கு தெரிந்ததும் மோனிகாவை கண்டித்தனர். ஆனால் தர்மராஜைத்தான் திருமணம் செய்வேன் என மோனிகா பிடிவாதமாக இருந்தார்.

மேலும் மோனிகாவை தர்மராஜ் பழஞ்சிறைக்கு அழைத்து சென்று மே 28-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், மோனிகா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்த மோனிகாவின் உறவினர்கள் பழஞ்சிறைக்கு சென்றனர். அங்கு மோனிகாவின் உடலில் காயம் உள்ளதால் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் மோனிகாவின் தாயார் பூமாதேவி கீழக்கரை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து டி.எஸ்.பி. சுபாசும் விசாரித்து வருகிறார்.