கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேசிய தெய்வீக பரப்புரை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. நிறுவன தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், மாநில துணை பொது செயலாளர் பெருமாள், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை தலைவர் பொன்னுபாண்டி, நகர தலைவர் செந்தில், நகர செயலாளர் ஆறுமுக பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் காளிராஜ், செல்வராஜ், முத்துக்குமார், ராமமூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் ஐவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தேவர் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய 26 ஆண்டுகால கோரிக்கை ஆகும். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசியுள்ளேன். முதல்-அமைச்சரிடமும் மனு வழங்கியுள்ளேன். எங்களது கோரிக்கையை நீண்டநாள் கோரிக்கை என்பதால் உடனடியாக முதல்-அமைச்சர் இதனை தேர்தலுக்கு முன்பாகவே நிறைவேற்ற வேண்டும்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான் புலிப்படைக்கான அரசியல் அடையாளத்தை கொடுத்தவர். அது கிடைப்பதற்கு சசிகலா உறுதுணையாக இருந்தார் என்பதை இப்போது வரை நான் கூறிக் கொண்டு தான் உள்ளேன். அதே நேரத்தில் ஜெயலலிதா உருவாக்கிய இந்த ஆட்சி கலைந்து விடக்கூடாது. சசிகலா சிறைக்கு செல்வதற்குமுன் உருவாக்கி நியமனம் செய்து விட்டு சென்ற இந்த ஆட்சி எந்த ரூபத்திலும், எந்த நேரத்திலும் என்னால் ஒரு சிறு இடையூறு கூட ஏற்பட்டு விடக்கூடாது என நான் மிகவும் கவனமாக உள்ளேன். இந்த நிமிடம் வரை அ.தி.மு.க.வில் தோழமை சட்டப்பேரவை உறுப்பினராக தான் இருக்கிறேன். இதை நான் தொடர்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.