விபத்து பலி 
செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே மொபட் மீது பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலி

ஜோலார்பேட்டை அருகே மொபட் மீது பஸ் மோதி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த பெரியபொன்னேரி பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் சிங்காரவேல் (வயது37). எலக்ட்ரீசியன். நேற்று காலை சிங்காரவேல் வேலைநிமித்தமாக மொபட்டில் ஏலகிரி மலைக்கு சென்று கொண்டிருந்தார். சின்னபொன்னேரி அருகே உள்ள சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது, ஏலகிரி மலையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் அவர்மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவர் பஸ்சில் சிக்கி சுமார் 50 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். படுகாயமடைந்த சிங்காரவேல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.