சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வருகிற 27-ந் தேதி (நாளை மறுதினம்) திறக்கப்பட இருக்கிறது. அதேபோல், அதற்கு மறுநாள் (28-ந் தேதி) ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லமும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் பெண் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததற்காகவும், பெண் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டுவந்ததற்காகவும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ‘ஜெயலலிதா வளாகம்' என்று பெயர் சூட்டப்படும் என்றும், உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்றும் சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலையை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சிலை நிறுவுவதற்கான பீடம் அமைக்கப்பட்ட நிலையில், மின்விளக்குகளால் சிலை ஒளிரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறந்து வைக்கப்பட்ட பிறகு, உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளார். அதேபோல், அன்றைய தினம் உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ஜெயலலிதாவின் பெயரையும் அவர் சூட்டுகிறார். இதற்கான திறப்பு விழாவில் கல்லூரி மாணவிகள் கலந்துகொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.