சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அமைந்துள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தை கடந்த மாதம் 27-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள இங்கு அறிவியல் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவை அமைக்கப்படுகின்றன.
இந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, இந்த நினைவிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நினைவிடத்தின் இரு பகுதிகளிலும் 8,550 சதுர அடி பரப்பளவில் அறிவியல் பூங்கா, நவீன அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சுவரோவியங்கள், ஆடியோ விளக்க காட்சிகள் இடம் பெறுகின்றன.
நவீன அருங்காட்சியகத்தில் 8 டிஜிட்டல் காட்சிகளை காணலாம். ஜெயலலிதாவின் சாதனைகள் இதில் இடம் பெறுகின்றன. ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் காட்சிகள் திரையிடப்படுகின்றன. இங்கு 8 டிஜிட்டல் அனுபவங்களை பார்வையாளர்கள் பெறலாம்.
பார்வையாளர்கள், தொடு திரை மூலம் ஜெயலலிதாவின் சாதனை பற்றிய கிராபிக்ஸ் வீடியோக்களை காணலாம். அவரது பல்வேறு திட்டங்களின் ‘2டி’ அனிமேஷன் வீடியோக்களும் இடம் பெறுகின்றன.
திரைப்படங்களில் நடித்தது முதல் ஜெயலலிதா வாழ்க்கையின் பல்வேறு சம்பவங்களும் டிஜிட்டல் திரையில் இடம் பெறுகின்றன. அவரது பள்ளி வாழ்க்கையும் இடம் பெறும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3டி மூலம் ஜெயலலிதாவுடன் பேசலாம். இதற்காக 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை கேட்டால் ‘நவீன 3டி’ காட்சி முலம் ஜெயலலிதா பதில் அளிப்பதை காணலாம். மலர்களின் மணமும் பரவும்.
நவீன ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலம் ஜெயலலிதாவுடன் செல்பி எடுக்கலாம். சைக்கிள் ஓட்டலாம். இதன் மூலம் 3 நிமிட பயண அனுபவம் பெற முடியும். மாணவர்கள் ஜெயலலிதா ஆட்சியின்போது கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும் காட்சியும் இடம் பெறும். விளையாடும் வசதியும் செய்யப்படுகிறது.
இது போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 100 பேர் அமரும் வசதியுடன் கூடிய ஆடிட்டோரியமும் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை நிறைவு செய்ய கூடுதலாக ரூ.12.5 கோடியை அரசு வழங்கியுள்ளது.
அதிநவீன அருங்காட்சி காட்சியக பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பொதுமக்கள் பார்வையிட வந்தால் இந்த பணிகள் பாதிக்கப்படும் என்பதால் தற்காலிகமாக நினைவிடம் மூடப்பட்டுள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் 24-ந்தேதி வருகிறது. அன்று முதல் பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்த்து மகிழும் வகையில் திறக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.