மதுரை:
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விமரிசையாக நடத்தப்படும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை.
அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வருவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் நடத்த தடை விதிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதனால் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க தயார்படுத்துவதில் சுணக்கம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் உரிய கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. போட்டிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என்றும், 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்த வேண்டும். வீரர்கள், பார்வையாளர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்படைந்து உள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் வருகிற 14-ந்தேதியும், பாலமேட் டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் நடைபெற உள்ளது.
இந்த போட்டிகளில் மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்க உள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 20 நாட்களே உள்ளதால் காளை வளர்ப்போர் மற்றும் மாடிபிடி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்க முழுவீச்சில் தயார்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, மேலூர், கொட்டாம்பட்டி, அவனியாபுரம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காளை வளர்ப்போர் தங்களது காளைகளுக்கு பிரத்யேக பயிற்சி அளித்து வருகின்றனர்.
காளைகளுக்கு வழக்கத்தை காட்டிலும் கூடுதலான சத்தான உணவுகளுடன், தினமும் பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர்.
இதற்காக காளைகளுக்கு வழக்கமான தீவனங்களுடன் பருத்தி கொட்டை, புண்ணாக்கு, தானிய பருப்பு, பச்சரிசி, தேங்காய் ஆகியவை உணவாக வழங்கப்படுகிறது.
காளைகளை பிடிக்கும் வீரர்களிடமிருந்து தப்பிக்க ஓட்டப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் வீரர்களை தாக்குவதற்கு வசதியாக மண்ணை குத்தும் பயிற்சி, இளைப்பு ஏற்படாமல் இருக்க மூச்சுப்பிடிப்பதற்கு நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இதில் பங்கேற்க காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.
காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து உரிமையாளர்கள் கூறுகையில், பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம். மற்ற நாட்களில் அதை செல்ல பிராணியாகவே பராமரிக்கிறோம்.
போட்டிகளில் வீரர்களை தயார் படுத்துவது போலவே, காளைகளையும் தயார்படுத்தி வருகிறோம். கொரோனா பரவல் மற்றும் தொடர் மழையால் காளைகளுக்கு பயிற்சி வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தற்போது அதிகாலையில் பனி அதிகமிருப்பதால் பிற்பகலில் தான் பயிற்சியை தொடங்குகிறோம். 3 வாரங்கள் இருப்பதால் அதற்குள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அளவுக்கு காளைகளை தயார் செய்துவிடுவோம் என்றனர்.
போட்டி ஏற்பாடு குறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழு தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், அரசும், மாவட்ட நிர்வாகமும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா விதிகள் மற்றும் விளையாட்டு விதி களை பின்பற்றி போட்டி நடத்தப்படும். இதில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய குழு காப்பீடு செய்ய உள்ளோம்.
கடந்த ஆண்டு முதன் முறையாக குழு காப்பீடு செய்யப்பட்டது. அதேபோல் இந்த முறையும் செய்யப்படும். இந்த காப்பீடு ஜல்லிக்கட்டு நடைபெறும் ஒரு நாள் மட்டுமே செல்லத்தக்கது. அன்றைய தினத்தில் விபத்து ஏற்பட்டால் அதன் செலவையும் காப்பீடு நிறுவனம் ஏற்கும். காப்பீடு செய்யும் பணியும் விரைவில் தொடங்கும் என்றார்.