செடி நடும் ஜக்கிவாசுதேவ் 
செய்திகள்

மண் வளத்தை மேம்படுத்த வேளாண் காடு வளர்ப்பு சிறந்த தீர்வாக இருக்கும்- ஜக்கிவாசுதேவ் தகவல்

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு, கர்நாடகாவில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர் என்று ஜக்கிவாசுதேவ் கூறினார்.

மாலை மலர்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கிவாசுதேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் சுமார் 16 கோடி ஹெக்டேர் விளைநிலங்கள் உள்ளன. ஆனால் நம் மண்ணில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் விளைச்சலுக்கு ஏற்புடைய மண் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்னும் 25 முதல் 30 ஆண்டுகளில், இந்த தேசத்தில் நமக்குத் தேவையான உணவை வளர்க்க முடியாமல் போகலாம்.

தண்ணீரும் உணவும் இல்லாதபோது நிகழும் உள்நாட்டு நெருக்கடியின் நிலை நாட்டை பல்வேறு வழிகளில் துன்பப்படுத்தும். கிராமங்களில் நீர் முழுவதுமாக வற்றிவிட்டால் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் நகர மையங்களுக்கு குடிபெயரப் போகிறார்கள். அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில், தீர்க்கமாய் ஏதோவொன்றை செய்யாவிட்டால், இதுபோன்ற பூதாகரமான சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடும்.

ஆகவே, மண் வளத்தை மேம்படுத்த வேளாண் காடு வளர்ப்பு அல்லது மரம் சார்ந்த விவசாய முறை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதன் காரணமாக நாங்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம் சார்ந்த விவசாயத்தை பரிந்துரைத்து வருகிறோம். விவசாயிகள் தங்களுடைய பிற பயிர்களுடன் சேர்த்து அல்லது தனியாகவோ மரங்களை வளர்க்க ஆலோசனை அளித்து வருகிறோம்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் படிப்படியாக மேலும் அதிகரிக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.