ஜெருசலேம்:
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவுகிறது.
இந்த சூழலில் இரு நாடுகளுமே கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் தனது நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டது.
அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேல் தனது அண்டை நாடான பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க மறுத்து வருவதாக ஐ.நா. மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தன. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாலஸ்தீனத்துக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் பாலஸ்தீனத்தில் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதற்கட்டமாக 5,000 கொரோனா தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது.
இந்த தகவலை இஸ்ரேல் ராணுவ மந்திரி பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.