புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்பு மருந்துகளை நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளான இலங்கை பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், மியான்மர், சிஷெல்ஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நட்பு நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்று கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்து இருந்தது.
இதன்படி நேபாளம், வங்காளதேசம், நேபாளம் மற்றும் மாலத்தீவுக்கு ஏற்கனவே இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கிடையே இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு 55 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், ‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு 55 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் இன்னும் சில தினங்களில் அனுப்பி வைக்கப்படும். அண்டை நாடுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்னும் சில தினங்களில் தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்.
இதன்படி ஓமனுக்கு 1 லட்சம் டோஸ்களும், மேற்கிந்திய தீவுகளுக்கு 5 லட்சம் டோஸ்களும், நிகரகுவாவுக்கு 2 லட்சமும், பசிபிக் தீவுகளுக்கு 2 லட்சம் டோஸ்களும் வழங்கப்படும். இதுதவிர வணிகரீதியாக பிரேசில், மொராக்கோ, வங்காளதேசம், சவுதிஅரேபியா, தென்ஆப்ரிக்கா, கனடா, மங்கோலியா நாடுகளுக்கும் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படும். ஆப்பிரிக்காவுக்கு 1 கோடி டோஸ் தடுப்பு மருந்தும், ஐ.நா.சுகாதார ஊழியர்களுக்கு 10 லட்சம் டோஸ் மருந்தும் அனுப்பப்படும்’ என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், இலவசமாக நேற்று இலங்கைக்கு சிறப்பு ஏர் இந்தியா மூலம் 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் 42 பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
கொழும்பு விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு மருந்துகள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் வழங்கப்பட்டன. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இலங்கையில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்தியாவிடம் இருந்து சுமார் 30 லட்சம் கொரோனா தடுப்பு மருந்து கொள்முதல் செய்யப்படும் என இலங்கை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.