சனா:
சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் விமானம் அந்நாட்டின் ஏடன் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்திறங்கினர். அமைச்சரவை உறுப்பினர்கள் வந்திறங்கிய சில நிமிடங்களில் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர் என ஏமன் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலையச்செய்யவே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஏமன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏடன் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம். அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் எந்த காரணங்களுக்காகவும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.