சீரமைப்பு பணிகளை இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி தலைமையிலான குழுவினர் பார்வையிட்ட காட்சி. 
செய்திகள்

காவிரி டெல்டா மாவட்ட ஆறுகளில் சீரமைப்பு பணிகளை தரமாக மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் சீரமைப்பு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

மாலை மலர்

திருக்காட்டுப்பள்ளி:

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன ஆதாரங்களை சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூதலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லணை, திருக்காட்டுபள்ளி, பூண்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் ஆறு சீரமைப்பு பணிகளை இந்திய கம்யூனிஸ்டு வடக்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் லதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கூறுகையில், ‘காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகள் வெளிப்படை தன்மையோடு நடைபெறவேண்டும்.

பணிகளை கண்காணித்து முறையாக செயல்படுத்த வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக கீழ்காவிரி வடிநில வட்டத்தில் உள்ள வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்துதல், ஏரிகளை தூர்வாருதல், நீரொழுங்கி, மதகுகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

கீழ்காவிரி வடிநில வட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதோடு, பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை உடனே மேம்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும்’ என்றார்.