கோப்புப்படம் 
செய்திகள்

கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை

கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்துவது சரியல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

நாட்டின் உயரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் 39 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் மிதமான கொரோனா பாதிப்பு கொண்ட நோயாளிகளை வைத்து பிளாஸ்மா சிகிச்சை பயன்பாடு குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது.

அதில், பிளாஸ்மா சிகிச்சை பெறாதவர்களுடன் ஒப்பிடுகையில், பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களுக்கு நோயின் தீவிரத்தை குறைப்பதிலோ, மரணத்தை தவிர்ப்பதிலோ அந்த சிகிச்சை எவ்வகையிலும் உதவவில்லை என்று தெரிய வந்தது.

சீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் பிளாஸ்மா சிகிச்சையால் குறிப்பிடத்தக்க அளவுக்கு பலன்கள் இருக்காது என்று கண்டறியப்பட்டது.

எனவே, கொரோனா நோயாளிகளுக்கு கண்மூடித்தனமாக பிளாஸ்மா சிகிச்சை அளிப்பது ஏற்புடையது அல்ல.

பிளாஸ்மா தானம் கொடுப்பவரின் உடலில், கொரோனாவை எதிர்த்து போராடும் அளவுக்கு ஆன்டிபாடி அதிகமாக இருந்தால்தான், பிளாஸ்மா சிகிச்சையால் பலன் கிடைக்கும். ஐ.சி.எம்.ஆர். ஏற்கனவே அறிவுறுத்திய நிபந்தனைகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தான், பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.