வேடசந்தூர்:
வேடசந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் காந்திராஜன், திண்டுக்கல் எம்.பி. வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க., துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,
வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தாலுகா பகுதியில் ஏற்பட்ட வறட்சியை கருத்தில் கொண்டு, தி.மு.க. ஆட்சியில் காவிரி குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு இன்று மக்கள் குடிநீர் பிரச்சினையின்றி உள்ளனர். குடகனாற்றை பொறுத்தவரையில் வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை தவிர்க்க தி.மு.க. ஆட்சிகாலத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் குடகனாறு அணை கட்டப்பட்டது. இன்று வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட காரணம், மின்சாரம் தனியாருக்கு போகும் சூழ்நிலை உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி இல்லை. வணிகர் நல வாரியம் செயல்படாமல் உள்ளது. அதை தி.மு.க. மீண்டும் செயல்படுத்தும். இவற்றையெல்லாம் சீர்தூக்கி பார்த்திட ஒரு நல்ல அரசாங்கம் வரவேண்டும். அடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, அவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார். அப்போது அனைத்து மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
நகர முடிவில் செயலாளர் கார்த்தி நன்றி கூறினார்.
கூட்டத்தில் வேடசந்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கவிதாபார்த்திபன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், வடமதுரை நகர செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.