கொலை 
செய்திகள்

விருத்தாசலம் அருகே மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவன்

விருத்தாசலம் அருகே தகராறில் மனைவியை கணவன் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் பில்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). விவசாயி. இவரது மனைவி கலியம்மாள் (54).

கணவன்-மனைவி இருவருக்கும் இடையே நேற்று இரவு திடீரென்று வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றி தகராறாக மாறியது.

ஆத்திரம் அடைந்த தங்கவேல் தனது மனைவி கலியம்மாளை சரமாரியாக தாக்கினார். பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து கலியம்மாளின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில் கலியம்மாளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு பிணமாக கிடந்த கலியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.