சென்னை:
சென்னை சாஸ்திரி நகரில் குப்பை தொட்டியில் கிடந்த எலும்பு கூடு தொடர்பாக மருத்துவ கல்லூரி மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் தங்கபழனி (வயது 45). இவர் துப்புரவு பணியாளராக வேலை செய்கிறார். இவர் கடந்த 23-ந்தேதி அன்று காலை சென்னை சாஸ்திரிநகர் முதல் மெயின் ரோடு, 6-வது குறுக்குதெரு சந்திப்பில் உள்ள குப்பை தொட்டியில் உள்ள குப்பையை அள்ளும் பணியில் ஈடுபட்டபோது அங்கிருந்த பிளாஸ்டிக் பையை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அந்த பிளாஸ்டிக் பைக்குள் மனித எலும்புக்கூடு ஒன்று இருந்தது. மிகவும் பழமையாக காணப்பட்ட அந்த எலும்புக்கூட்டை சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த எலும்புக்கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அந்த எலும்புக்கூடு தடய அறிவியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தடயஅறிவியல் துறையினர் நடத்திய ஆய்வில் அந்த எலும்புக்கூடு மீது வார்னிஷ் பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த எலும்புக்கூட்டை மருத்துவகல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களது படிப்புக்காக பயன்படுத்தி இருக்கலாம், என்று தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்க்கும் காவலாளி ஒருவர் எலும்புக்கூடு உள்ள பையை குப்பை தொட்டியில் வீசிச்சென்றது தெரிய வந்தது. அந்த காவலாளியை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர் வேலைபார்க்கும் முதலாளிக்கு தெரிந்த நண்பர் ஒருவரின் மகளான மருத்துவ கல்லூரி மாணவி, அந்த எலும்புக்கூடு உள்ள பிளாஸ்டிக் பையை வீட்டில் வைத்து விட்டு சென்றதாகவும், அதை குப்பை தொட்டியில் போட்டதாகவும் காவலாளி கூறினார்.
பூந்தமல்லியில் வசிக்கும் அந்த மருத்துவகல்லூரி மாணவியிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். அந்த எலும்புக்கூடு எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது பற்றி அந்த மாணவியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தனர்.