கோப்புபடம் 
செய்திகள்

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 22 பேர் இறந்தது எப்படி? டீன் பேட்டி

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 691 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 9 ஆயிரத்து 956 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2584 பேர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 151 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை 17 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 22 பேர் கொரோனா வார்டில் இறந்துள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் அல்லி “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

பெரும்பாலானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் இறுதிக்கட்டத்தில் மேல்சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். அவர்கள் மோசமான நிலையில் வருவதால் இங்கு வந்து ஒரே நாளில் இறந்து விடுகின்றனர். ஆனாலும் நாங்கள் அவர்களின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறோம்.

நேற்று இறந்தவர்களில் 3 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் நுரையீரல் பாதிப்பு உள்பட பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.

தமிழகம் முழுவதும் டாக்டர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டாக்டர்கள் பற்றாக்குறையாக இருந்தாலும் நாங்கள் தீவிர சிகிச்சை அளித்து பொதுமக்களின் உயிரை காப்பாற்றி வருகிறோம்.

எனவே பொதுமக்கள் சளி, காய்ச்சல், உடல்வலி, இருமல், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT