சென்னை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் உடல் நலம் சரியில்லாமல் விடுப்பில் வெளியில் வந்த பேரறிவாளன், கடந்த 7-ந்தேதி சிறைக்குள் சென்றார்.
இந்த நிலையில் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் அனுமதி வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறிஇருப்பதாவது:-
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரதாப்குமார்,’கொரோனா காலம் என்பதால் பேரறிவாளனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை காணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க முடியும். ஆனால் பேரறிவாளனின் வக்கீல் என்று கூறி பலர் கும்பலாக சந்திக்க வருகின்றனர்’ என்று கூறினார்.
எனவே, உறவினர்கள், நண்பர்களை காணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க வேண்டும். வக்கீல்களை பொருத்த வரை அவர்கள் பெயர் பட்டியலை சிறை நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும்.
அதில் யாரை அனுமதிப்பது என்பதை சிறை சூப்பிரண்டு முடிவு செய்வார். அற்புதம்மாளை பொருத்தவரை அவர் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவ சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் வருகிற ஜனவரி 19-ந்தேதி வரை வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.