புதுடெல்லி:
முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.3,600 கோடியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதுடன், இந்த ஊழல் தொடர்பாக விசாரணையும் முடுக்கி விடப்பட்டது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், இந்த ஊழல் தொடர்பாக பிரபல பாசுமதி அரிசி விற்பனை செய்யும் கே.ஆர்.பி.எல். நிறுவனத்தின் இணை மேலாளரான அனூப் குமார் குப்தாவை தற்போது கைது செய்துள்ளனர்.பின்னர் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி குப்தாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கைது நடவடிக்கை டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.