துவரங்குறிச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போது எடுத்த படம். 
செய்திகள்

துவரங்குறிச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்

துவரங்குறிச்சி பஸ் நிலையம் முன் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மாலை மலர்

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து தான் அருகில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி-மதுரை இடையே இரு மார்க்கத்திலும் துவரங்குறிச்சி வழியாகத்தான் பஸ்கள் செல்லும்.

இந்தநிலையில் பஸ் நிலையம் தற்போது விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால் பஸ்கள் அனைத்தும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி துவரங்குறிச்சிக்கு பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இதன்காரணமாக துவரங்குறிச்சியில் பஸ் நிலையம் முன் சாலையோரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதோடு, இருசக்கர வாகனங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றது.

இதனால் நள்ளிரவு நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் துவரங்குறிச்சியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதனால் அந்த நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருப்பதால் தான் இதுபோன்ற ஒரு நிலை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எனவே துவரங்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும், விதிமீறும் வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.