நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பூதப்பாண்டி, களியல், கன்னிமார், மாம்பழத்துறையாறு, கோழிப்போர்விளை, அடையாமடை பகுதிகளில் மழை பெய்தது. சிற்றாறு-1-ல் அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், பேச்சிப்பாறை அணை பகுதியிலும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள்.
அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சிற்றாறு-1 அணையில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 43.94 அடியாக உள்ளது. அணைக்கு 1,174 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 378 கனஅடி தண்ணீரும், உபரி நீராக 368 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 67.36 அடியாக உள்ளது. அணைக்கு 570 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர் மட்டம் 16.89 அடியாக உள்ளது. அணைக்கு 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் மதகு வழியாகவும், 268 கனஅடி தண்ணீர் உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.
கோதையாறு இடதுகரை கால்வாயை தூர்வாரும் பணி நாளை 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடக்கிறது. எனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்படும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.