கோவை:
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
காரமடையை அடுத்த காளம்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான புஜங்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக 9, 10,11, 12-ம் வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது இந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி நேற்று முதல் வருகிற 18-ந் தேதி வரை 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் காளம்பாளையம் ஊராட்சி சார்பில் பள்ளியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வெடி மருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிளஸ்-1 படிக்கும் அந்த பெண்ணின் மகனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது. அந்த மாணவரும், அவரது தாயாரும் ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாணவர் படித்த பள்ளியும் உடனடியாக மூடப்பட்டது.
குன்னூர் அருகே ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. விழாவில் பங்கேற்ற மணமகனின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.