அதிராம்பட்டினத்தில் மருத்துவ குணம் கொண்ட சேற்று நாரை நண்டுகளை படத்தில் காணலாம். 
செய்திகள்

அதிராம்பட்டினத்தில் மருத்துவ குணம் கொண்ட சேற்று நாரை நண்டுகள் கிலோ ரூ.150-க்கு விற்பனை

அதிராம்பட்டினம் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில் சேற்று நாரை நண்டுகள் பிடிபடுவதால் கிலோ ரூ.150-க்கு விற்பனையாகிறது.

மாலை மலர்

அதிராம்பட்டினம்:

நண்டுகளில் நெடுங்கால் நண்டு, சம்பா நண்டு, கண் நண்டு உள்ளிட்ட ஏராளமான வகைகள் உள்ளன. இந்த நண்டுகள் பெரும்பாலும் ஆழ்கடல் பகுதியில் தான் அதிகம் கிடைக்கும். அதிராம்பட்டினம் கடற்கரையில் அலையாத்திகாடு கரை ஓரத்தில் இருக்கும் நண்டுகள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதனால் இந்த நண்டுகளை அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் மருந்துக்காக வாங்கி செல்கின்றனர். இந்தநிலையில் மருத்துவ குணம் கொண்ட சேற்று நாரை நண்டுகள் அதிக அளவில் அதிராம்பட்டினம் பகுதிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நண்டுகள் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபற்றி வியாபாரி மாரிமுத்து கூறுகையில்,

சம்பா நண்டுக்கு அடுத்த ரகம் தான் இந்த சேற்று நாரை நண்டு. இது சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றை உடனடியாக குணப்படுத்தக்கூடிய தன்மை உள்ளது.

இந்த நண்டு ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க கூடியதால் மருந்துக்காகவே பயன் படுத்தப்படுகிறது. இந்த நண்டுகள் அதிராம்பட்டினம் பகுதிக்கு தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த நண்டை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார்.

இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் கடற்கரை ஓரங்களில் அலையாத்தி இலையை உணவாக உட்கொண்டு கடலில் சேற்று பகுதியில் இந்த நாரை நண்டுகள் தற்போது இனப்பெருக்கம் செய்துள்ளது. இது பெரும்பாலும் எல்லா நாட்களிலும் கிடைக்காது. தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் மழை பெய்து வந்த நிலையில் இந்த வகை நண்டுகள் பிடிபடுகிறது. இந்த நண்டுகள் கிலோ ரூ.150-க்கு விற்பனையாகிறது என்றார்.