போலீசார் விசாரணை 
செய்திகள்

பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு புகார்- சிபிசிஐடி அலுவலகத்தில் டிஜிபி ஆஜர்

டிஜிபி பிரதீப் வி.பிலிப் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் முன்னிலையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய டிஜிபி ஆஜரானார்.

மாலை மலர்

சென்னை:

போலீஸ் டி.ஜி.பி. ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அதிகாரி ஒருவர் தமிழக காவல் துறை டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார்.

இந்த புகாரில் உண்மை உள்ளதா என விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டது.

அக்குழு விசாரணை நடத்தியது. பின்னர் போலீஸ் டி.ஜி.பி. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பெண் அதிகாரி புகார் கொடுக்க வந்தபோது தடுத்ததாக போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் மீது துறைரீதியிலான 'சஸ்பெண்ட்' நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெண் போலீஸ் அதிகாரியின் பாலியல் குற்றச்சாட்டு வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை நடத்த தொடங்கியது.

வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி போலீஸ் டி.ஜி.பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி பிரதீப் வி.பிலிப் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் முன்னிலையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய டி.ஜி.பி. ஆஜரானார்.

எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு வந்த அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. கண்ணனும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.