ஹைதி அதிபர் ஜோவெனல் மாய்சே 
செய்திகள்

ஹைதி அதிபரை கொன்ற 4 பேர் சுட்டுக்கொலை- 2 பேர் கைது

அதிபர் கொலை செய்யப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் கூறினார்.

போர்ட்டொ பிரின்ஸ்:

தென்அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் ஹைதி என்ற தீவு நாடு அமைந்துள்ளது. இதன் அதிபராக ஜோவெனல் மாய்சே இருந்து வந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவருடைய பதவி காலம் முடிந்து விட்டது. ஆனால் ஒரு ஆண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்து இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன.

இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுத கும்பல் ஒன்று திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. அப்போது உள்ளே இருந்த அதிபர் ஜோவெனல் மாய்சேவை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். அவரது மனைவி மார்ட்டின் மாய்சேவையும் சுட்டனர். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிபர் கொலை செய்யப்பட்டதால் ஹைதி நாட்டில் பதட்டம் ஏற்பட்டது. இதற்கிடையே துப்பாக்கி சண்டை நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களில் 4 பேரை சுட்டுக்கொன்றனர். 2 பேரை கைது செய்தனர்.

இதற்கு பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

இது சம்பந்தமாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் கூறும்போது, அதிபர் கொலை செய்யப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அதிபர் கொல்லப்பட்டதால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.