போரூர்:
கோயம்பேடு சந்தைக்கு விழுப்புரம், கடலூர் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினசரி 8 முதல் 10 டன் வரை கொய்யாப்பழம் விற்பனைக்கு வருவது வழக்கம்.
தற்போது விளைச்சல் அதிகம் காரணமாக அதன் வரத்து திடீரென 2 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களாக 25 டன் வரை கொய்யாப்பழம் விற்பனைக்கு குவிந்து வருகிறது. இதன் காரணமாக அதன் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது
மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.4க்கு கொய்யாப்பழம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் பலர் மினி வேன் மற்றும் தள்ளுவண்டி மூலம் கொய்யாப்பழங்களை அதிக அளவில் வாங்கி சென்று பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மைக் செட் மூலம் கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சி அடைந்த போதிலும் கோயம்பேடு சந்தையில் சில்லரை வியாபாரிகள் வரத்து குறைவாக காணப்படுவதால் கொய்யா உள்ளிட்ட பழங்கள் விற்பனை தொடர்ந்து மந்தமாகவே உள்ளது.
இதன் காரணமாக கொய்யா உள்ளிட்ட பழங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து குவிந்து கிடக்கிறது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இன்று மொத்த விற்பனை கடைகளில் விழுப்புரம் கொய்யாப்பழம் ஒரு பெட்டி (15 கிலோ) ரூ.50க்கும், கர்நாடக மாநிலம் மாலூர் கொய்யாப்பழம் ஒரு பெட்டி (25 கிலோ) ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் அதையும் வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் அதிகளவில் மார்க்கெட்டுக்கு வரவில்லை.
இதேபோல் வரத்து அதிகரிப்பால் தூத்துக்குடி சீத்தாப்பழம் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. சீத்தாப்பழம் கிலோ ரூ.15க்கும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30க்கு விற்ற முதல் ரக சாத்துக்குடி தற்போது ரூ.20க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கொய்யா மொத்த வியாபாரி பி.ஏ.எஸ் பாய் கூறியதாவது:-
கோயம்பேடு சந்தைக்கு விளைச்சல் அதிகம் காரணமாக கொய்யாபழம் வரத்து திடீரென 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அதன் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் தற்போது செயல்படுவதால் பழ விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விற்பனை நேரத்தை நீட்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.