தடுப்பூசி போடும் பணி (கோப்பு படம்) 
செய்திகள்

2 தடுப்பூசிகளுக்கு அனுமதி... 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம்

மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை 7 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு கொணடு வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கொரோனாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் தடுப்பூசிகள் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளன. இந்த மருந்துகளை 15-க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது பயன்படுத்தி வருகின்றன.

இந்தியாவிலும் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனேகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தது.

அந்த மருந்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. இதை இந்தியாவிலும் பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது.

இந்த மருந்தை இந்தியாவில் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. எனவே சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் மத்திய அரசு அனுமதியை கேட்டு இருந்தது.

இந்தியாவில் தடுப்பூசி மருந்து பயன்படுத்த வேண்டும் என்றால் இங்குள்ள மக்களுக்கு அதை செலுத்தி சோதனைகள் நடத்தப்படவேண்டும். இந்த சோதனையையும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் நடத்தி முடித்தது. அது வெற்றிகரமாக அமைந்தது.

அந்த நிறுவனம் கோவிஷீல்டு மருந்து சோதனை பற்றிய முழு விவரங்களையும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கி இருந்தது. அதன் நிபுணர் குழுவினர் அந்த மருந்தை முழுமையாக ஆய்வு செய்தனர். ஆனாலும் மேலும் சில விளக்கங்களை கேட்டு இருந்தனர். நேற்று முன்தினம் நிபுணர் குழுவினர் மீண்டும் கூடி ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் திருப்தி ஏற்பட்டது.

இதனால் இந்தியாவில் இதை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்கள். இதையடுத்து இந்த மருந்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவுடேகர் தெரிவித்தார்.

இதேபோல ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் மருந்துக்கும் மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. இந்த மருந்து முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

புனேயில் உள்ள மத்திய அரசின் வைரலாஜி ஆய்வு நிறுவனம், மத்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மருந்தை தயாரித்து இருந்தன.

இதற்கு அனுமதி அளிப்பது சம்பந்தமாகவும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டது. அதில் கூடுதல் விளக்கங்கள் வேண்டும் என்று நிபுணர் குழு கேட்டது. இதனால் பாரத் பயோடெக் நிறுவனம் மேலும் சில விளக்கங்களை அளித்தது.

நேற்று மீண்டும் நிபுணர் குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இந்த மருந்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம் என முடிவு எடுத்தனர். அதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கும் அவர்கள் சிபாரிசு செய்தனர்.

எனவே இந்த 2 மருந்துகளுக்கும் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு முறைப்படி இன்று அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் சோமானி வெளியிட்டார்.

2 மருந்துகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு விட்டதால் உடனடியாக மத்திய அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது. மருந்துக்கு ஒப்புதல் கிடைத்ததும் அதை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளது.

மேலும் எவ்வாறு மருந்துகளை குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது? எவ்வாறு அதை பயன்படுத்துவது? எப்படி மருந்தை கொண்டு வந்து ஊசி போடுவது? என்பது சம்பந்தமாக மருத்துவ குழுவினருக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.

இதற்கான ஒத்திகை நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த ஒத்திகை சிறப்பாக அமைந்தது. 

தற்போது தடுப்பூசி மருந்துகளுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதால், 7 நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துள்ளது. முதலாவதாக முன்கள பணியாளர்கள், அத்தியாவசிய தேவை உள்ளவர்கள் என 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. அடுத்து 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட உள்ளனர்.

இந்த பணி 6 மாதத்தில் முடிவடையும். அதன்பிறகு அனைவருக்குமே தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது. தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாகவே போடப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருக்கிறது.