திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் மலையானது சிவலிங்க வடிவமாகவும், யானை படுத்திருப்பது போன்றும் காட்சியளிக்கிறது. பவுர்ணமி நாளில் இத்தகைய சிறப்பு கொண்ட மலையை சுற்றி கிரிவலம் வந்தால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் தரிசனம் செய்த பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக உள்ளது. எனவே பவுர்ணமிதோறும் பக்தர்கள் குவிந்து கிரிவலம் வருகின்றனர். இது தவிர கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் நாள்தோறும் மலையை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பக்தர்கள் சிரமமின்றி கிரிவலம் வருவதற்கு வசதியாக சீரான நடைபாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் பெயர்த்து எடுக்கப்பட்ட பேவர்பிளாக் கற்களை பயன்படுத்தி திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் நடைபாதை அமைத்தனர். 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் 1½ கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதிலும் நடுவில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்காமலேயே பேவர் பிளாக் கற்களை பதித்துள்ளனர்.
இதனால் அந்த வழியாக வரக்கூடிய வாகனங்கள் சில நேரங்களில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு புதிதாக நடைபாதை அமைத்தும் பக்தர்களுக்கு பயனில்லாத நிலையே இருந்து வருகிறது.
இந்த நிலையில் பேவர் பிளாக் கற்கள் அமைத்து ஒரு மாதம் ஆன நிலையில் ஆங்காங்கே மேடு, பள்ளமாக மாறி உள்ளது. இதன் காரணமாக பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நடந்து செல்ல முடியாதபடி குப்பை தொட்டியையும் பாதையில் வைத்துள்ளனர். இத்தகைய அவல நிலையால் கிரிவலம் வரக்கூடிய பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கிரிவலப் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.