கோப்புபடம் 
செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்துக்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ

பெங்களூரு விமான நிலையத்துக்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மனப்பா வஜ்ஜல்(வயது 60). இவர் பெங்களூருவில் இருந்து அவர் ஐதராபாத்திற்கு விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அதுபோல மனப்பா வஜ்ஜல் கையில் வைத்திருந்த ஒரு பையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த பையில் ஒரு துப்பாக்கி, 16 துப்பாக்கி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மனப்பா வஜ்ஜலை பிடித்து, விமான நிலைய போலீசாரிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது துப்பாக்கிக்கு தன்னிடம் உரிமம் உள்ளது என்று மனப்பா வஜ்ஜல் கூறினார். மேலும் தனது பையில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கவனிக்கவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார். ஆனாலும் துப்பாக்கியையும், குண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மனப்பா வஜ்ஜலிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படடது.