மல்லிகை பூ 
செய்திகள்

மதுரையில் பூக்கள் விலை வரலாறு காணாத வீழ்ச்சி

மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வணிகங்கள் பாதிக்கப்பட்டாலும் மலர் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாலை மலர்

மதுரை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பலகட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா முதல் அலையில் தொடங்கிய பாதிப்பு 2-வது அலையிலும் அதிகமாக காணப்பட்டு வருகிறது

மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வணிகங்கள் பாதிக்கப்பட்டாலும் மலர் விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக விவசாயிகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், வலையங்குளம், எலியார்பத்தி, திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை, சம்பங்கி, கனகாம்பரம், கேந்தி, சிவந்தி, கொழுந்து உள்ளிட்ட பல்வேறு மலர்கள் விவசாயம் செய்யப்படுவது வழக்கம்.

குறிப்பாக மதுரை என்றாலே மல்லிகைக்கு பெயர் பெற்றது என்பதால் மல்லிகை விவசாயம் அதிகளவில் நடைபெறும்.

தற்போது கோடைகாலம் என்பதால் மல்லிகை விளைச்சலும் அதிகளவில் இருக்கும். அந்த வகையில் மதுரை மலர் சந்தைகளுக்கு சுமார் 20 டன்களுக்கு மேலாக தினமும் பூக்கள் வரும். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாகவும் விவசாய பணிகள் பாதிப்பு காரணமாகும் பூக்கள் வரத்து சற்று குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மார்க்கெட்டுக்கு சராசரியாக தினமும் 10 டன் மல்லிகை வருவது வழக்கம். நேற்று முதல் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சற்று குறைவாகவே காணப்பட்டன. மல்லிகை பூக்கள் 5 டன் மட்டுமே வந்தது. ஆனால் பொதுமக்கள் மலர்களை வாங்க அதிக ஆர்வம் காட்டாததால் மல்லிகையே விற்பனை படு மந்தமாகவே இருந்தது. சீசன் நாட்களில் ரூ.3000 வரை விற்பனை செய்யப்படும் மதுரை மல்லிகை இன்று ரூ. 120 வரை விலை போனது. ஆனாலும் வாங்க வாடிக்கையாளர்கள் வராததால் பூக்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் கலக்கம் அடைந்தனர்.

மல்லிகைக்கே இந்த நிலை என்றால், மற்ற மலர்களை சொல்ல வேண்டியதில்லை. கோவில் விழாக்கள் மற்றும் சுபகாரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் சம்பங்கி, அரளி. கோழிக்கொண்டை, கேந்தி, செவ்வந்தி, கொழுந்து உள்ளிட்ட மலர்கள் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனாலும் வாங்க ஆள் இல்லை. இதனால் எதிர்பார்த்த விற்பனை இல்லை. நீண்ட நேரம் விற்பனை ஆகாத மலர்கள் குப்பையில் கொட்டும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாட்டுத்தாவணி மலர் வணிகர் சங்க தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் மலர் விவசாயிகளும் வியாபாரிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து விட்டனர். சுபகாரியங்கள் கோவில் விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பூக்களை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் போதிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் பூக்களை பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகளில் பூக்களை பறிக்காமல் செடியிலே வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மலர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.