மலைக்கோட்டை:
திருச்சி திருவானைக்காவல் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள சங்கர் தோப்பை சேர்ந்தவர் முத்து மகன் மாரி (வயது 24). இவர் மணமேடை டெக்கரேஷன் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தனது பழுதான செல்போனை சரி செய்வதற்காக கொடுப்பதற்காக மாரி சென்றார்.
அப்போது அங்கு வந்த ஏற்கனவே மாரிக்கு பழக்கமான 16 வயதுடைய 5 சிறுவர்கள் மாரியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் மாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஸ்ரீரங்கம் பகுதியில் ஏற்கனவே கடந்த மே மாதம் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய மாரியை பழிக்கு பழி வாங்குவதற்காக திருவானைக்காவல் நரியன் தெருவை சேர்ந்த 5 சிறுவர்கள் மாரியை கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் குத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மாரி கொடுத்த புகாரின் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரியை கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் குத்திக் கொலை செய்ய முயன்ற 5 சிறுவர்களை கைது செய்து விசாரித்தனர். பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.