பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீர். 
செய்திகள்

இரணியல் அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய 5 பேர் கைது

இரணியல் அருகே திமிங்கலத்தின் உமிழ்நீரை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இரணியல்:

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அபூர்வமான மருத்துவக் குணங்கள் நிறைந்த வன உயிரின பொருட்கள் சட்ட விரோதமாக கடத்த முயற்சி நடப்பதாக இரணியல் இன்ஸ்பெக்டர் தங்கராஜிக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை அடுத்து சுங்கான் கடையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். எவ்வித அரசு அனுமதி இன்றி திமிங்கலத்தின் உமிழ்நீர் சுமார் 5 கிலோ அளவில் சட்ட விரோதமாக கடத்தி செல்வது தெரியவந்தது.

இதனை அடுத்து காரில் இருந்த செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியம் (வயது45), ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் (52), சென்னையை சேர்ந்த வரதராஜன் (40), திருவட்டார் பகுதியை சேர்ந்த சில்வெஸ்டர்(45), பொன்ராஜ் (60) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் பிடிப்பட்ட 5 பேரையும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.