கேஎஸ் அழகிரி 
செய்திகள்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இலங்கை தூதரகம் முன்பு போராட்டம்- கேஎஸ் அழகிரி

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவில்லை என்றால் இலங்கை தூதரகம் முன்பு போராட்டம் நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான 121 மீன்பிடி படகுகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யலாம் அல்லது உடைத்து அப்புறப்படுத்தலாம் என்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் கடந்த 7-ந் தேதி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பதற்றமான சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலத்தில் இலங்கை தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோதும், தாக்குதலுக்கு உள்ளான போதும் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இலங்கை எல்லையை மீறி விமானம் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதேபோல இலங்கை அரசை ஏதோ ஒருவகையில் மத்திய அரசு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்கள் இழந்த படகுகளை மீட்கவும், இழப்பை ஈடுகட்டவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவில்லை என்றால், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பாக சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் மீனவர்களை திரட்டி கடுமையான போராட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.