கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது55). இவர் ஏர்வாடி அருகே முத்தரையர் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு சண்முகராஜ் ஏர்வாடி தர்கா அருகே படுத்திருந்தார். அவர் இரவில் அங்குதான் தூங்குவது வழக்கம்.
இன்று காலை அவர் நீண்ட நேரமாக எழுந்திருக்கவில்லை. குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சண்முகராஜ் இறந்து கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஏர்வாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சண்முகராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது.
இதற்கிடையில் சண்முகராஜ் மனைவி சுதர்சன தேவி கூறுகையில், நேற்று ஏர்வாடி தர்காவில் அன்னதான பொட்டலம் வழங்கப்பட்டது. அதனை வாங்கும்போது எனது கணவருக்கும், மதுரையை சேர்ந்த அஜித்குமார் என்ற சாகுல் ஹமீது என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அவர் தாக்கினார். இதனால் தான் எனது கணவர் இறந்து இருக்கலாம்? என போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோதலில் சண்முகராஜ் வயிற்றின் மீது ஏறி மதுரையை சேர்ந்த அஜித் குமார் என்ற சாகுல் ஹமீது மிதித்ததாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகத்தான் சண்முகராஜ் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும்.
இருப்பினும் தாக்குதல் தொடர்பாக சாகுல்ஹமீதை ஏர்வாடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.