என்ஜினீயரிங் கல்லூரியில் இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் முதலாம் ஆண்டில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், துணை கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவது தொடர்பான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் வளாக கல்லூரிகளில் முழுநேர பி.இ., பி.டெக். முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 1-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகள் மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, வருகிற 1-ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு அடிப்படை கல்விகள், கற்றல் செயல்பாடுகள் உள்பட புத்தாக்க பயிற்சிகள் குறித்து நடத்தப்படும். அதன்பிறகு வருகிற 15-ந்தேதி முதல் படிப்புக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் தொடங்கப்படும். முதல் செமஸ்டருக்கான கடைசி வேலைநாட்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி ஆகும்.
முதல் மதிப்பீட்டுக்கான அறிக்கையை ஜனவரி 5-ந்தேதியும், 2-ம் மதிப்பீட்டுக்கான அறிக்கையை மார்ச் 1-ந்தேதியும் தேர்வு கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக கல்வி படிப்புகள் மையம் அறிவித்துள்ளது. அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சிகள் நேரடியாக அளிக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின்னர் படிப்புக்கான வகுப்புகள் இட வசதிக்கு ஏற்ப நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்துவது பற்றி முடிவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது
இதையும் படியுங்கள்...அம்மா உணவகங்களில் மீண்டும் சப்பாத்தி விற்பனை தொடங்கியது