தூத்துக்குடி:
தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் சிகால் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. சுமார் 200 மீட்டர் நீளமுள்ள இந்த குடோனுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் பொருட்கள் கொண்டு வரப்பட்டு, பின்னர் அவற்றை கன்டெய்னர்களில் ஏற்றி, தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம்.
அதன்படி ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏற்றுமதிக்காக 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஜவுளி துணிகள், ரெடிமேடு ஆடைகள், விளையாட்டு பொருட்கள், பேப்பர் ரீல் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் குடோனுக்கு கொண்டு வரப்பட்டு ஏற்றுமதிக்காக தயாராக வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அந்த குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் குடோன் முழுவதும் மளமளவென்று தீ பரவியது. இதனால் அங்கிருந்த பணியாளர்கள் அலறியடித்தவாறு வெளியே ஓடி வந்தனர்.
இந்த பயங்கர தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு துறை துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி தெர்மல் நகர், சிப்காட், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நாலாபுறமும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் 4 தனியார் நிறுவனங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. எனினும் குடோனில் இருந்த துணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரிந்ததால், பல அடி உயரத்துக்கு புகை மூட்டமாக காட்சி அளித்தது.
பல மணி நேரமாக தீயணைக்கும் பணி நடந்தது. எனவே, தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீரை ஏற்றி வந்து, தீயணைப்பு வாகனங்களில் நிரப்பி தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஏராளமான தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் குடோனில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் குடோனின் மேற்கூரையும் சரிந்து சேதமடைந்தது.
தீ விபத்துக்குள்ளான குடோனை தூத்துக்குடி தாசில்தார் ஜஸ்டின், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கூறியதாவது:-
தனியார் குடோனில் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட ஏற்றுமதி துணிகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் இருந்த ஏராளமான பொருட்கள் தீப்பற்றி எரிந்து உள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் குடோனில் உள்ள பொருள்கள் வேகமாக தீப்பற்றி எரிந்தன.
ஆனாலும் 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.