வங்கியில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் கருகி கிடக்கும் காட்சி. 
செய்திகள்

ஆத்தூரில் தனியார் வங்கியில் தீ விபத்து- கம்ப்யூட்டர், ஆவணங்கள் எரிந்து நாசம்

ஆத்தூரில் இன்று காலை தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் எரிந்து சாம்பலானது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் புறக்காவல் நிலையம் அருகில் தனியாருக்கு சொந்தமான வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி பணியாளர்கள் நேற்று இரவு பணிகளை முடித்து விட்டு வங்கியை பூட்டி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியினர் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து வந்த வங்கி ஊழியர்கள் கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது உள்ள இருந்த ஆவணங்கள் மற்றும் அங்கிருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஆத்தூர் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை பரவ விடாமல் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

ஆனாலும் அதற்குள் வங்கியின் உள்ளே இருந்த ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்கள் உள்பட பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. இதனால் வங்கியின் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.