வையம்பட்டி:
வையம்பட்டி அருகே பழையகோட்டையை சேர்ந்த 38 வயது பெண் அதே பகுதியைச் சேர்ந்த சூசை (வயது 58) என்பவரின் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை சூசை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். இதை அறிந்த சூசை மற்றும் அவரது மனைவி ஆரோக்கியம்மாள், மகன் சவரிமுத்து, சகோதரர் பொன்னுக்காளை உள்ளிட்டோர் 6 மாதம் கர்ப்பமாக இருந்த அந்த பெண்ணை மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சம்மந்தப்பட்ட தனியார் கிளினிக்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சூசை, அவருடைய மனைவி, மகன், சகோதரர் மற்றும் கருக்கலைப்பு செய்தவர்கள் உள்பட 6 பேர் மீது வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.