திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரில் தனியார் தொழிற்சாலை உள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த 21 வயது பெண் என்ஜினீயர் ஒருவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பயிற்சிக்காக பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் பயிற்சி ஒரு ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி சக நண்பர்களுக்கு மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பெண் என்ஜினீயர் விருந்து கொடுத்தார்.
இரவு 8 மணி அளவில் விருந்து முடிந்ததும் அனைவரும் ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது மதுபோதையில் பெண் என்ஜினீயர் தனது ஜீப்பை ஓட்டிச்சென்றார். கட்டுப்பாட்டை இழந்த ஜீப் புறப்பட்ட சிறிது தூரத்திலிலேயே தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது மோதியது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஜீப்பை ஓட்டி வந்த பெண் என்ஜினீயர் மதுபோதையில் கட்டுப்பாடு இன்றி பேசினார்.
மேலும் மீண்டும் தானே ஜீப்பை ஓட்டிச் செல்வதாக போலீசாரிடம் அடம்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் கேட்காமல் தகராறு செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் பெண் என்ஜினீயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அந்த பெண் என்ஜினீயரின் நண்பர்களுக்கு போலீசார் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்ததும் பெண் என்ஜினீயரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இன்று காலை விசாரணைக்கு வருமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘பெண் என்ஜினீயரிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும்’ என்றனர்.