போராட்டம் 
செய்திகள்

பிப்ரவரி 2-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மறியல், சிறை நிரப்பும் போராட்டம்- அன்பரசு அறிவிப்பு

பிப்ரவரி 2-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு அறிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்‌ஷன் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்த ஜாக்டோ ஜியோவின் போராட்டம் 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

அப்போது ஜனவரி 22-ந் தேதி முதல் 10 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டோம்.

அதன்பிறகு கோர்ட்டு தலையிட்டதன் காரணமாக பணிக்கு திரும்பினோம். ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் 5,068 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்குகளை இந்த அரசு பதிவு செய்தது.

ஆம்புலன்சை தடுத்து நிறுத்தியதாகவும், போலீசாரை அடித்தாகவும் காரணம் கூறி உள்ளனர். இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பலரை சஸ்பெண்டும் செய்தனர்.

இதனால் 5,068 பேர் கோர்ட்டுக்கு அலைந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. ஓய்வு பெற்றால் பென்‌ஷன் கிடைப்பதில்லை.

இதுகுறித்து அரசுக்கு நாங்கள் பல முறை கோரிக்கை வைத்தோம். ஆனாலும் எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் மீண்டும் போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

ஜனவரி 19, 20 தேதிகளில் மண்டல அளவில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், ஜனவரி 27-ல் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாட்டை மதுரையில் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

பிப்ரவரி 2-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி சிறைகளை நிரப்புவது என்று முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.