கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர்- வடபாதிமங்கலம் சாலையில், நாகங்குடி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே பழையனூர் பாசன வாய்க்கால் மதகு அப்பகுதி விவசாயிகளின் தேவைக்காக அமைக்கப்பட்டது. இந்த பாசன வாய்க்கால் மூலம் பழையனூரில் உள்ள சுமார் 50 ஏக்கர் விளை நிலங்களுக்கு, வெண்ணாற்றிலிருந்து வரும் தண்ணீரை கொண்டு சென்று சாகுபடி பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பழையனூர் பாசன வாய்க்கால் மதகு பழுதடைந்த நிலையில் உள்ளது.
தற்போது மதகின் தடுப்பு தூண்கள் உடைந்து விழுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளதாகவும், சாலையோரத்தில் மிகப் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு மதகின் தண்ணீரை தேக்க பலகை இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள். இதனால் கடந்த 7 வருடங்களாக பாசன வாய்க்கால் மதகு மூலம் தேவையான தண்ணீரை கொண்டு செல்லவும் முடியவில்லை. குறிப்பாக தண்ணீர் தேவையில்லாதபோது மதகை அடைக்கவும் முடியவில்லை.
இதனால் ஆண்டுதோறும் விவசாய பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் சாலையோரத்தில் பாசன வாய்க்கால் மதகு பழுதடைந்த நிலையில் இருப்பதை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைகிறார்கள். பழுதடைந்த மதகு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பழுதடைந்த பழையனூர் பாசன வாய்க்கால் மதகை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.